திருப்பூரில் 7 மூட்டை தபால்களை வீட்டில் பதுக்கியதாக குற்றச்சாட்டு; நாய் கடித்த சம்பவத்தால் வெளிச்சத்துக்கு வந்த விவகாரம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் பகுதியில் பணியாற்றி வந்த தபால்காரர் ஒருவர், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தபால்களை பல ஆண்டுகளாக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம் கோவை சாலையில் உள்ள தட்டாந்தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் செந்தில்குமார் (47), வெள்ளகோவில் தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தபால்கள், ஆதார் அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், வங்கி ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக், செக் புக், பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை உரியவர்களிடம் வழங்காமல் தனது வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் எதிர்பாராத விதமாக நாய் கடித்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. செந்தில்குமார் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்களில் ஒன்று, அருகில் வசிக்கும் பழனியம்மாள் (64) என்பவரை துரத்தி சென்று கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
பின்னர் நகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடிக்க சென்றபோது, அந்தப் பகுதியை சுத்தம் செய்யும் பணியின் போது வீடுகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டிய ஏராளமான தபால்கள் சிதறிக் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள், மாணவர்களின் கல்லூரி சான்றிதழ்கள், வழக்கறிஞர்களுக்கான தபால்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததையடுத்து, திருப்பூர் தபால் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2022 முதல் 2026 வரை வழங்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படும் தபால்கள் 7 சாக்கு மூட்டைகளில் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சில தபால்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், தபால் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் உண்மை நிலை மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.