dark_mode
Image
  • Wednesday, 24 June 2026

முதல்வர் விஜய் குறித்து பேச்சு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு

முதல்வர் விஜய் குறித்து பேச்சு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருணாநிதியின் 108-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, முதல்வர் விஜயை விமர்சித்ததாகவும், அவரது பேச்சு மரியாதைக் குறைவாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆத்தூர் பகுதி நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரில், முதல்வர் குறித்து ஒருமையில் பேசி, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட ஆத்தூர் போலீசார், அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மரியாதைக் குறைவாக அவதூறு பரப்பும் வகையில் பேசியது, மோதலைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தது மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.

related_post