dark_mode
Image
  • Friday, 09 January 2026

இலவச லேப்டாப் திட்டம்… புது பெயர், 20 லட்சம் மாணவர்கள் டார்கெட்- ஸ்டாலின் இன்று தொடக்கம்!

இலவச லேப்டாப் திட்டம்… புது பெயர், 20 லட்சம் மாணவர்கள் டார்கெட்- ஸ்டாலின் இன்று தொடக்கம்!

தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இதன்மூலம் 10 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு லேண்ட்மார்க் திட்டங்களை தொடங்கி வைத்து தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை முதல் மக்களைத் தேடி மருத்துவம் வரை லிஸ்ட் பெரிதாக காணப்படுகிறது. இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய சில திட்டங்கள் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் ஒன்று.

உலகம் உங்கள் கையில் திட்டம் தொடக்கம்

இந்நிலையில் தங்கள் ஆட்சி முடிவடையும் நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நெருங்கும் வேளையில் இலவச லேப்டாப் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்துயிர் ஊட்டியுள்ளார். இதற்கு ”உலகம் உங்கள் கையில்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் உலகில் தேவையான விஷயங்களை தேடி பெற்று பயன்பெறும் வகையில் லேப்டாப்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இலவச லேப்டாப்பை பெற்று கொள்ளும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் அரசு பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்டவற்றில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக 10 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதற்கான பணிகள் வரும் பிப்ரவரி மாத இறுதியில் முடிவடையும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக 10 லட்சம் பேருக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கிடைக்கும்.

இந்த திட்டத்திற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் லேப்டாப் நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் போடப்பட்டு தரமான லேப்டாப்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உதாரணமாக டெல், ஏசர், ஹெச்.பி ஆகிய நிறுவனங்களை சொல்லலாம். மேலும் லேப்டாப்பின் அம்சங்களும் பல ஆண்டுகள் சிறப்பாக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இண்டெல் ஐ3 அல்லது ஏ.எம்.டி ரைஸென் 3 பிராசசர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்.எஸ்.டி சேமிப்பு, விண்டோஸ் 11, பாஸ் லினக்ஸ், எம்.எஸ் ஆபிஸ் 365 மற்றும் 6 மாத காலத்திற்கு பெர்பிளக்சிட்டி ப்ரோ ஏ.ஐ இலவச சந்தா வசதியும் அளிக்கப்படுகிறது.

இந்த லேப்டாப்கள் வைத்துக் கொள்ளும் வகையில் பை ஒன்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், முதல் தலைமுறை ஊக்கத்தொகை. சமூக நீதி விடுதிகள், கல்லூரி கால ஊக்கத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் உலகம் உங்கள் கையில் எனப்படும் இலவச லேப்டாப் திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.

related_post