dark_mode
Image
  • Tuesday, 09 June 2026

சென்னையில் தொடரும் மின்தடை: திட்டமிட்ட சேதப்படுத்தல் காரணமா.? அமைச்சர் விளக்கம்

சென்னையில் தொடரும் மின்தடை: திட்டமிட்ட சேதப்படுத்தல் காரணமா.? அமைச்சர் விளக்கம்

சென்னையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் சில இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேடவாக்கம், ஜல்லடியன்பேட்டை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், சில இடங்களில் திட்டமிட்ட வகையில் மின்விநியோக அமைப்புகள் சேதப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். பியூஸ் கேரியர்கள் அகற்றப்படுதல் உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இதுதொடர்பாக புகார்களும் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிசிடிவி பதிவுகள் கிடைத்த சில பகுதிகளில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மின்தடை ஏற்பட்டவுடன் சிலர் பொதுமக்களை சாலை மறியலுக்கு தூண்டுவதாகவும் அமைச்சர் கூறினார். பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், மின்வாரிய பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக பழுதுகளை சரிசெய்து மின்விநியோகத்தை மீட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்தடை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதம் நீடித்து வருகிறது. அதிகாரப்பூர்வ விசாரணைகளின் முடிவுகள் வெளியாகும் வரை இந்த விவகாரம் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

related_post