காஷ்மீரில் 2 பேருந்துகளில் குண்டுவெடித்து 2 பேர் காயம்

காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூரில் இந்துக்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர்.
அங்கு ராணுவத்தின் வடக்கு பிரிவின் தலைமையகம் செயல்படுகிறது. நகரின் டோமல் சவுக் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஏராளமான தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். அங்கு நேற்று முன்தினம் இரவு இங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் பேருந்து முற்றிலுமாக உருக்குலைந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை உதம்பூர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் பேருந்துக்கு சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செப்டம்பர் 30-ம் தேதி ஜம்முக்கு வருவதாக இருந்தது. தற்போது பயண தேதி தள்ளி வைக்கப்பட்டு வரும் 4-ம் தேதி அவர் ஜம்முக்கு வருகிறார். இந்த சூழலில் வெடிகுண்டுகள் வெடித்திருப்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுக்கள் பயன்படுத்தும் வெடி குண்டுகள் உதம்பூர் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து புலன் விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவ இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description