dark_mode
Image
  • Tuesday, 30 June 2026

விஜய்யின் நம்பிக்கை வட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி... தவெகவில் முக்கிய பொறுப்பா.? இடைத்தேர்தல் களமிறங்குகிறாரா.?

விஜய்யின் நம்பிக்கை வட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி... தவெகவில் முக்கிய பொறுப்பா.? இடைத்தேர்தல் களமிறங்குகிறாரா.?

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் முக்கிய நியமனங்கள் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. நீண்ட காலமாக தன்னுடன் பயணித்த, நம்பிக்கைக்குரிய நிர்வாகிகள் மற்றும் விசுவாசமான துணைநிலையினருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கும் அணுகுமுறையை விஜய் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் தற்போது தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமியின் பெயர் அதிகம் பேசப்படுகிறது.

சமீப காலம் வரை திரைமறைவிலேயே செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, தற்போது கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருவது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது அவருக்கு விரைவில் கட்சியில் முக்கிய அமைப்புப் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது ஆட்சியுடன் சேர்த்து கட்சி அமைப்பையும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக, விஜய்யின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த பலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

விஜய்யின் கார் ஓட்டுநராக இருந்த ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஆளுங்கட்சி கொறடாவாக உள்ளார். அதேபோல், முன்னாள் மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டதுடன், தயாரிப்பாளர் வெங்கட நாராயணா டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றார்.

இந்த சூழலில், ஜான் ஆரோக்கியசாமியின் அரசியல் செயல்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் இணைந்து அவர் நேரில் சென்று வருகிறார். முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளிலும் அவரது பங்கேற்பு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதுவரை ஊடக வெளிச்சத்தைத் தவிர்த்து செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, தற்போது வெள்ளை சட்டையில் முழுநேர அரசியல்வாதி போல கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அவருக்கான அடுத்த கட்ட அரசியல் பயணத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜான் ஆரோக்கியசாமியை வேட்பாளராக நிறுத்துவது குறித்து தமிழக வெற்றிக் கழக உயர்மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தேர்தல் வியூகங்களில் அனுபவம் பெற்ற அவர், நேரடியாக தேர்தல் அரசியலிலும் களமிறங்கினால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்ற மதிப்பீடு நிலவுவதாக கூறப்படுகிறது.

எனினும், ஜான் ஆரோக்கியசாமி திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது கட்சியில் புதிய அமைப்புப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனவே, அடுத்தகட்ட அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

related_post