வாகன மதிப்பின் அடிப்படையில் பேன்சி எண் கட்டணம்; தமிழக அரசு புதிய முன்மொழிவு
சென்னை: தமிழ்நாட்டில் விருப்பமான விஐபி மற்றும் பேன்சி வாகன எண்களைப் பெற விரும்புவோர் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு பேன்சி எண்களுக்கான கட்டண அமைப்பில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை ஒரே மாதிரியான கட்டண முறை பின்பற்றப்பட்ட நிலையில், இனி வாகனத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
புதிய முன்மொழிவின்படி, ரூ.50,000 வரையிலான மதிப்புள்ள இருசக்கர வாகனங்களுக்கு பேன்சி எண் பெற ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், ரூ.30 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள உயர்தர இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் சொகுசு வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் வாகன மதிப்பைப் பொறுத்து ரூ.20,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை உயர்த்தப்பட உள்ளது. தற்போது வழங்கப்படும் எண்களைத் தாண்டி, எதிர்காலத் தொடர்களில் உள்ள எண்கள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு விஐபி எண்களுக்கான கட்டணங்களும் கணிசமாக அதிகரிக்கப்படுகின்றன.
அதன்படி, எதிர்காலத் தொடர் எண்களுக்கான கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்படுவதுடன், 13 மற்றும் 14-ஆம் எதிர்காலத் தொடர்களில் இடம்பெறும் விருப்ப எண்களுக்கு புதிய பிரீமியம் பிரிவின் கீழ் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு திருத்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்த பின்னர் புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வரும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.