ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்; உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், 2025 செப்டம்பரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த கட்சித் தலைவர் விஜய், தேர்தலுக்குப் பிறகு அவர்களின் இல்லங்களுக்கு நேரில் வருவதாக உறுதியளித்திருந்தார்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் முதல்வர் விஜய் கரூர் செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன.
இந்நிலையில், கரூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்து, இன்று (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், "வரும் ஜூலை 10-ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு வருகிறார்" என்று அறிவித்தார்.
கரூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர் விஜய், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வேலுச்சாமிபுரம் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், அவர்களின் இல்லங்களில் உள்ள புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.