‘வெற்றி தொலைக்காட்சி’ தொடங்கப்படுகிறதா..? அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஊடக தளமாக "வெற்றி தொலைக்காட்சி" என்ற புதிய செய்திச் சேனல் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் இது குறித்து பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தகவல்களின்படி, ஜூன் 22-ஆம் தேதி சேனலின் லோகோ அறிமுகப்படுத்தப்படலாம் என்றும், சென்னையின் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சேனலுக்கான அலுவலகப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் முக்கிய கட்சிகள் தங்களுக்கென ஊடக தளங்களை உருவாக்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தனது அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொள்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசுத் திட்டங்கள், நலத்திட்ட அறிவிப்புகள் மற்றும் அரசின் நிலைப்பாடுகளை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் 24 மணி நேர செய்தி மற்றும் அரசியல் விவாத சேனலாக இது செயல்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மக்கள் மையப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள், அரசு திட்டங்கள் குறித்த சிறப்பு தொகுப்புகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள், மாணவர் விவாதங்கள், விவசாயம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள், அரசியல் நேர்காணல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களிலும் "வெற்றி டிவி" தொடர்பான தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. ஆதரவாளர்கள் இதை கட்சியின் தகவல் தொடர்பு வலிமையை அதிகரிக்கும் முயற்சியாகக் கருதுகின்றனர். அதே நேரத்தில், ஒரு புதிய சேனல் மக்களிடையே நம்பகத்தன்மையைப் பெறுவது முக்கிய சவாலாக இருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லோகோ அறிமுகம் தொடர்பான தகவல்கள் பரவி வரும் நிலையில், "வெற்றி தொலைக்காட்சி" குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசியல் மற்றும் ஊடக உலகம் ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறது.