மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்வு.? விரைவில் நல்ல அறிவிப்பு வரும்... அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, தவெக தலைவர் விஜய், ஆட்சிக்கு வந்தால் இந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பயனாளிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நிர்வாக மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதியின்படி இந்தத் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும்," என்றார்.
மேலும், "தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைத்து பெண்களும் இந்தத் திட்டத்தின் பயனை பெறும் வகையில் அரசின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும். முதலமைச்சர் விஜய் அளித்த வாக்குறுதியின்படி, ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்," என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசுத் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.