தமிழக புதிய பாடத்திட்டக் குழுவில் தவெக நிர்வாகி இடம்பெற்றது சர்ச்சை; விளக்கம் அளித்தார் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடத்திட்டங்களை மறுசீரமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி கே.எஸ்.டி. அனந்த்ஜித் மக்கியா இடம்பெற்றிருப்பது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, திமுக ஆட்சிக் காலத்தில் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் பள்ளிப் பாடத்திட்ட வடிவமைப்புக் குழு செயல்பட்டது. அந்தக் குழுவில் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.
தற்போது புதிய ஆட்சியில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தவெக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.டி. அனந்த்ஜித் மக்கியா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் கட்சியின் நிர்வாகி ஒருவர் பள்ளிப் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் இடம்பெற்றிருப்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நியமனத்திற்கு யார் அனுமதி வழங்கினர், எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இதனுடன், முன்னாள் குழுத் தலைவர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் நீக்கப்பட்டதாக வெளியான தகவலும் பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், "ஆட்சி மாற்றம் காரணமாக நான் பதவி விலகினேன் என்ற தகவல் தவறானது. நான் தயாரிக்கப்பட்ட புதிய பாடநூல்களின் பிரதிகளை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் வழங்கியபோது எடுத்த புகைப்படம் வெளியானதால், நான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிப்பதாக தவறான எண்ணம் உருவாகியுள்ளது" என்றார்.
மேலும், "நான் ஜெயலலிதா, கருணாநிதி, மு.க. ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு முதல்வர்களின் ஆட்சிக் காலங்களிலும் கல்வித் துறையில் பணியாற்றியுள்ளேன். எனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை. புதிய குழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்த்துகள். நாங்கள் தொடங்கிய நல்ல கல்விக் கொள்கை முயற்சிகளை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.