தமிழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியல் வெளியீடு – ஜூலை 20 முதல் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் 2026–27 கல்வியாண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 1.08 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA) பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 3 முதல் ஜூன் 5 வரை நடைபெற்றது. இதில் சுமார் 2.25 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண்ணில் 53 மாணவர்கள் 200க்கு 200 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில் 39 பேர் அரசு பள்ளி மாணவர்கள் ஆவர். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷிதா 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 7.5% அரசு பள்ளி இடஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவதர்ஷனி முதலிடம் பெற்றுள்ளார்.
மாணவர்கள் தங்களது தரவரிசையை www.tneaonline.org இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கலந்தாய்வு அட்டவணை:
-
சிறப்பு பிரிவுகள் (7.5% அரசு பள்ளி ஒதுக்கீடு, விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள்): ஜூலை 13 மற்றும் 14
-
பொதுக் கலந்தாய்வு: ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 30 வரை
தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்ய இன்று முதல் ஜூலை 5 வரை குறைதீர்ப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை நேரில் அணுகி தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.