dark_mode
Image
  • Wednesday, 01 July 2026

குமரி அணுக்கனிம சுரங்கத் திட்டம்: கால நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்

குமரி அணுக்கனிம சுரங்கத் திட்டம்: கால நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான கால நீட்டிப்பு அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய சூழலில், ஐ.ஆர்.இ.எல். (IREL) நிறுவனத்தின் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு அரசு மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்கியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அரசு போதிய அக்கறை காட்டவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2024 நவம்பர் 3 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தில், கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் அதே அரசு திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்கியிருப்பது தேர்தல் கால வாக்குறுதிக்கும் தற்போதைய நடவடிக்கைக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஏற்கனவே அதிகளவிலான கனிம வள அகழ்வால் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், நிலத்தடி நீர் குறைவு, விவசாய பாதிப்பு, கடல் அரிப்பு மற்றும் இயற்கைச் சீற்றங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிள்ளியூர் தாலுகாவைச் சேர்ந்த கடலோரக் கிராமங்களில் சுமார் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்படுவது மாவட்டத்தின் சுற்றுச்சூழல் சமநிலையை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த 2024 அக்டோபரில் திட்டத்திற்காக நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம், மக்களின் எதிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் போராட்டங்களால் ஒத்திவைக்கப்பட்டதை நினைவுபடுத்திய அவர், பொதுமக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லை என்ற ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசு கால நீட்டிப்பு வழங்கியிருப்பது மக்களின் உணர்வுகளை புறக்கணிப்பதாக அமைந்துள்ளது என்றார்.

எனவே, தமிழ்நாடு முதல்வர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மக்களின் அச்சங்களை கருத்தில் கொண்டு, ஐ.ஆர்.இ.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அணுக்கனிம சுரங்கத் திட்ட கால நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கன்னியாகுமரி மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

related_post