dark_mode
Image
  • Friday, 21 August 2026

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி புகார்: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி புகார்: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்

அரசு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரில், தனது மகனுக்கு அரசு வேலை பெற்றுத் தருவதாக உறுதியளித்து ரூ.23 லட்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை, அமைச்சரின் நெருங்கியவர் எனக் கூறப்படும் இளஞ்செழியன் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கரை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அப்போது வேலை உறுதியாக கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும், பின்னர் வேலை வழங்கப்படாமலும் பணமும் திருப்பி வழங்கப்படாமலும் ஏமாற்றப்பட்டதாக புகார்தாரர் கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளஞ்செழியன் மீதும் தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கவும், விசாரணையில் ஒத்துழைக்கவும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆஜராக வேண்டும் என அசோக் நகர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணையின் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related_post