436 முக்கியத் திட்டங்கள், 34 துறைகள்... விஜய் அரசின் 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு திட்டம்.!
சென்னை: அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு 'வெற்றித் தமிழகம்' என்ற தொலைநோக்கு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் உள்கட்டமைப்பு, மக்கள் நலன், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 34 துறைகளில் 436 முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் அனைத்தும் காலக்கெடுவுடன் மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், 'வெற்றித் தமிழகம்' திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர்களின் திறன் மேம்பாடு, மகளிர் முன்னேற்றம், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாடு, லஞ்சமற்ற நிர்வாகம் மற்றும் போதைப் பொருள் இல்லாத தமிழகம் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக இடம்பெற்றுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் சாலை வசதிகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் 10 ஆண்டு நெடுஞ்சாலை மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
அதேபோல், சென்னை நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 2026–2046 காலத்தை உள்ளடக்கிய 3-வது சென்னை மாஸ்டர் பிளான் தயாரிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாஸ்டர் பிளானில், நகரம் கிடைமட்டமாக விரிவடைவதை விட, குறிப்பிட்ட பகுதிகளில் அதிக 'தரை இடக் குறியீடு' (FSI) வழங்கி, உயரமான கட்டடங்கள் மூலம் செங்குத்து நகர வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், மத்திய அரசின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவைப் பெறுவதற்கும், மாநிலத்தின் நீண்டகால நிதி திட்டமிடலுக்கும் இந்த வளர்ச்சித் திட்டம் முக்கிய பங்காற்றும் என தலைமைச் செயலக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.