நேபாள வெள்ள பாதிப்பு: “மிக உயர்ந்த முன்னுரிமை” — ஜெய்சங்கர் தகவல்
புதுடெல்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பை இந்தியா மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள், கடைகள், விடுதிகள், அரசு கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வெள்ளத்தில் இந்தியர்களும் சிக்கியுள்ளதால், அவர்களின் நிலை குறித்து காத்மாண்டு மற்றும் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் வெளியுறவுத்துறை தொடர்ந்து தகவல்களை பெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா ஏற்கனவே இரண்டு விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து தூதரகங்கள் தகவல் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நேபாளத்துக்கு கூடுதல் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், “இந்த விவகாரத்துக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உருவான பெரிய தடுப்பு ஏரி உடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை நிலவுகிறது.
நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, இதுவரை 117 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 85 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.