dark_mode
Image
  • Saturday, 12 September 2026

போராட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை இல்லை என உறுதி வேண்டும்; புதிய நிபந்தனை வைத்த சோனம் வாங்சுக்

போராட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை இல்லை என உறுதி வேண்டும்; புதிய நிபந்தனை வைத்த சோனம் வாங்சுக்

புதுடெல்லி: நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 25-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக், "போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அரசு உறுதியளித்தால் மட்டுமே எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன்" என்று புதிய நிபந்தனை விதித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், மருத்துவமனையில் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துள்ள அவர், தேர்வு வினாத்தாள் கசிவால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் கல்வி அமைச்சரின் பொறுப்புக்கூறல் குறித்து நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதம் நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், அதில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது சட்ட வழக்குகள், துன்புறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 65 எம்.பி.க்கள் தமக்கு கடிதம் எழுதி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும், தானும் தனது மாணவர்களிடமும் கல்விப் பணிகளிடமும் திரும்ப விரும்புவதாகவும் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

ஆனால், "இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மீது எந்தவித தண்டனை அல்லது பழிவாங்கும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அரசு தெளிவான உறுதிமொழி அளித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன். இல்லையெனில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டிய நிலை ஏற்படும்" என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இறுதியாக, "நமது ஜனநாயகத்தின் வலிமை, அதனை விமர்சிப்பவர்களையும், நியாயத்திற்காக குரல் கொடுக்கும் இளைஞர்களையும் அரசு எவ்வாறு நடத்துகிறது என்பதில்தான் உள்ளது" என்றும் தனது கடிதத்தில் சோனம் வாங்சுக் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 

related_post