“அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல” — மரியவில்சன் ஆஜர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னை: புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக விலக்கு கோரிய மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ளார்.
அவருக்கும், புதுச்சேரியில் வசிக்கும் அவரது சகோதரர் மரிய கிளோத்துக்கும் இடையே சொத்து மற்றும் தொழில் தொடர்பாக நீண்டகாலமாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல் தொடர்பாக, மரியவில்சன் மீது புதுச்சேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வழக்கு விசாரணைக்காக அமைச்சர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகாததால் நீதிமன்றம் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தது.
இதனிடையே, வழக்கை ரத்து செய்யவும், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி அமைச்சர் மரியவில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், குடும்பத்தகராறு தொடர்பாக சமரசம் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டியிருப்பதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி லட்சுமிநாராயணன், “நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று கூற அமைச்சர் இங்கிலாந்து அரசர் கிடையாது. அமைச்சராக இருப்பதால் சட்டத்துக்கு மேலானவர் என்ற நிலை கிடையாது” எனக் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், தற்போது அமைச்சரான பிறகு ஆஜராகாமல் இருக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
“அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை” எனக் கூறிய நீதிபதி, அமைச்சர் எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்பதை இன்றே தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.