dark_mode
Image
  • Saturday, 25 July 2026

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி: NIA விசாரணை கோரிய மனு வாபஸ்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி: NIA விசாரணை கோரிய மனு வாபஸ்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணி தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 20-ஆம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.

பேரணிக்கு அனுமதி வழங்கப்படாததால், போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரு தரப்பினரையும் சேர்ந்த பலர் காயமடைந்ததுடன், பொதுச் சொத்துகள் மற்றும் சில தனியார் சொத்துகளும் சேதமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அகில பாரத் இந்து மகாசபா அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் சதீஷ் குமார், சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் பதிவு செய்த வழக்குகளை NIA-விடம் மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பேரணியில் ஈடுபட்டவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகவும், சம்பவத்தின் பின்னணியை முழுமையாக விசாரிக்க NIA விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, NIA விசாரணைக்கு நேரடியாக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது; அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெற விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பின் மூலம், பேரணி தொடர்பான வழக்குகள் தற்போதைக்கு டெல்லி போலீசாரின் விசாரணையிலேயே தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.

related_post