dark_mode
Image
  • Friday, 31 July 2026

ஆகஸ்ட் 2026: வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.!

ஆகஸ்ட் 2026: வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.!

ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில், வங்கிகளில் நேரடியாகச் சென்று செய்ய வேண்டிய பணிகள் இருப்பவர்கள் விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம். வழக்கமாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும், மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும். இதனுடன் மாநில வாரியான பண்டிகை விடுமுறைகளும் இணைந்துள்ளதால், ஆகஸ்ட் 2026-இல் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்க வங்கி தொடர்பான பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்வது சிறந்தது.

இந்த விடுமுறைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் விடுமுறை அட்டவணையின் அடிப்படையில், மாநிலங்களுக்கு மாநிலம் பண்டிகைகள் மற்றும் சிறப்பு நாட்களைப் பொறுத்து வங்கிகளின் செயல்பாடு மாறுபடும்.

ஆகஸ்ட் 2026 வங்கி விடுமுறை பட்டியல்:

  • ஆகஸ்ட் 2 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை – நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
  • ஆகஸ்ட் 4 (செவ்வாய்): கெர் பூஜா பண்டிகையையொட்டி திரிபுரா மாநில வங்கிகளுக்கு விடுமுறை.
  • ஆகஸ்ட் 8 (சனி): சிக்கிமில் டெண்டோங் லோ ரம் ஃபாட் பண்டிகை காரணமாக அங்குள்ள வங்கிகள் மூடப்படும்.
  • ஆகஸ்ட் 9 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை.
  • ஆகஸ்ட் 13 (வியாழன்): தேசபக்தர்கள் தினம் முன்னிட்டு மணிப்பூர் மாநில வங்கிகளுக்கு விடுமுறை.
  • ஆகஸ்ட் 15 (சனி): இந்தியாவின் சுதந்திர தினம் – நாடு முழுவதும் வங்கிகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.
  • ஆகஸ்ட் 16 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை.
  • ஆகஸ்ட் 19 (புதன்): மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளையொட்டி திரிபுராவில் வங்கிகள் செயல்படாது.
  • ஆகஸ்ட் 22 (சனி): மாதத்தின் 4-வது சனிக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
  • ஆகஸ்ட் 23 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை.
  • ஆகஸ்ட் 25 (செவ்வாய்): மிலாடி நபி, முதல் ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில வங்கிகளுக்கு விடுமுறை.
  • ஆகஸ்ட் 26 (புதன்): ஈத்-இ-மிலாத், திருவோணம் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மணிப்பூர், ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • ஆகஸ்ட் 28 (வெள்ளி): ஈத்-இ-மிலாத்-உல்-நபி, ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி, அய்யன்காளி ஜெயந்தி, ரக்ஷா பந்தன், பாங்-லாப்சோல் போன்ற பண்டிகைகளையொட்டி குஜராத், ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • ஆகஸ்ட் 30 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை.

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

வங்கிகள் விடுமுறையில் இருந்தாலும், இணைய வங்கி (Net Banking), மொபைல் பேங்கிங், UPI, IMPS, NEFT (குறிப்பிட்ட நேரங்களில்), ATM சேவைகள் உள்ளிட்ட டிஜிட்டல் வங்கி சேவைகள் வழக்கம்போல கிடைக்கும். இருப்பினும், காசோலை செலுத்துதல், டிமாண்ட் டிராஃப்ட், கிளை தொடர்பான சேவைகள் மற்றும் நேரடி வங்கி பரிவர்த்தனைகளுக்கு கிளைகள் திறந்திருக்கும் நாட்களை முன்கூட்டியே சரிபார்த்து திட்டமிடுவது நல்லது.

related_post