தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை: பதிலுக்கு நாளை வரை அவகாசம் கேட்ட மத்திய அரசு
புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளிக்க, ஜூலை 25 மதியம் வரை அவகாசம் கோரியுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சிஜேபி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
போராட்டத்துக்கு தீர்வு காணும் முயற்சியாக, சிஜேபி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், அரசு அனைத்து கோரிக்கைகளையும் திறந்த மனதுடன் விவாதிக்க தயாராக இருப்பதாகவும், மாணவர்களின் நலனுக்காக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சிஜேபி, பேச்சுவார்த்தை பொதுமக்கள் முன்னிலையில் ஜந்தர் மந்தர் அல்லது கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியது. பின்னர், இருதரப்பினரின் ஒப்புதலுடன் விட்டல் படேல் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் மத்திய அரசு சார்பில் சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர். சிஜேபி சார்பில் சவுரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரங்கா கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆசுதோஷ் ரங்கா, சிஜேபி மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்தார்.
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
- நீட் தேர்வு விவகாரத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
- போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
இந்த கோரிக்கைகளில், மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஆகிய இரு கோரிக்கைகளையும் கொள்கை ரீதியாக அரசு ஏற்றுக்கொண்டதாகவும், கல்வி அமைச்சர் தொடர்பான கோரிக்கைக்கு ஜூலை 25 மதியம் வரை பதிலளிக்க அவகாசம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், "தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவதில் தாமதம் ஏற்பட்டால் போராட்டம் மேலும் தீவிரமடையும். அரசு விரைவில் முடிவு எடுக்கும் என நம்புகிறோம்" என்று ஆசுதோஷ் ரங்கா தெரிவித்தார்.