dark_mode
Image
  • Wednesday, 22 July 2026

டெல்லி போராட்டம் தீவிரம்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரள்வார்கள் - சிஜேபி எச்சரிக்கை

டெல்லி போராட்டம் தீவிரம்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரள்வார்கள் - சிஜேபி எச்சரிக்கை

புதுடெல்லி: தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், டெல்லியை நோக்கி லட்சக்கணக்கான இளைஞர்கள் திரள்வார்கள் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 20 நடைபெற்ற பேரணி "வெறும் ட்ரெய்லர் மட்டுமே" என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், சிஜேபி கடந்த ஜூன் 28 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் ஆதரவு தெரிவித்ததுடன், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். பின்னர், டெல்லி போலீசார் அவரை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அகற்றினர்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா, "அரசு எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்தால், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியில் திரள்வார்கள். எங்கள் போராட்டம் அமைதியான முறையில்தான் நடைபெறுகிறது. ஆனால் மாணவர்கள் மீது பலம் பயன்படுத்தப்பட்ட பிறகே பதற்றம் ஏற்பட்டது" என்று தெரிவித்தார்.

மேலும், போராட்டக்காரர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுவதை எதிர்ப்பதாகவும், எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தாலும் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், போராட்டத்தின் போது சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக டெல்லியின் பல காவல் நிலையங்களில் மொத்தம் 10 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறை மீது தாக்குதல், பொதுச் சொத்துச் சேதம், அரசு அதிகாரிகளை பணியாற்ற விடாமல் தடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி மெட்ரோவின் ஜன்பத், ராஜீவ் சவுக், படேல் சவுக் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் உள்ளிட்ட நான்கு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், கூடுதல் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் படையினரும் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

related_post