dark_mode
Image
  • Thursday, 27 August 2026

"கரூர் சம்பவத்துக்கும் இடைத்தேர்தலுக்கும் தொடர்பில்லை" – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

கரூர் உயிரிழப்பு சம்பவத்துக்கும் வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் மற்றும் தவெக மூத்த தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் நிகழ்ந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறினார். சம்பவம் நடந்த நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே முழு தகவல் தெரியாத நிலையில், சில அரசியல் தலைவர்கள் மிக விரைவாக சம்பவ இடத்துக்கு வந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் நிலவரம் குறித்து பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் தவெகவில் இணைந்து வருவதாகவும் தெரிவித்தார். கட்சியில் இணையும் அனைவருக்கும் உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

டிடிவி தினகரனின் அரசியல் நிலைப்பாட்டையும் விமர்சித்த அமைச்சர், முன்பு கடுமையாக எதிர்த்தவர்களுடன் தற்போது இணைந்து செயல்படுவது குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், "பாஜகவே எங்கள் கொள்கை எதிரி. மத்திய அரசை எதிர்க்க வேண்டிய இடங்களில் தொடர்ந்து எதிர்ப்போம்; இதில் எந்த சமரசமும் இல்லை" என்று நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியது இடைத்தேர்தலை முன்னிட்டு செய்யப்பட்ட நடவடிக்கை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்த அவர், "மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. தேர்தலை சந்திக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். கரூர் சம்பவத்துக்கும் இடைத்தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று விளக்கமளித்தார்.

 
 

related_post