dark_mode
Image
  • Saturday, 11 July 2026

ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய புரட்சி: ஜூலை 15 முதல் மேம்பட்ட IRCTC தளம் அறிமுகம்

ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய புரட்சி: ஜூலை 15 முதல் மேம்பட்ட IRCTC தளம் அறிமுகம்

இந்திய ரயில்வே பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், IRCTC இணையதளம் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு, அதன் பீட்டா பதிப்பு ஜூலை 15 முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

புதிய தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் முன்பதிவு வேகம் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, தட்கல் முன்பதிவின்போது அடிக்கடி ஏற்பட்ட சர்வர் முடக்கம், கேப்ட்சா தாமதம் போன்ற பிரச்சினைகள் பெருமளவில் குறையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய அமைப்பில் தேவையற்ற பாப்-அப் திரைகள் மற்றும் சிக்கலான செயல்முறைகள் நீக்கப்பட்டுள்ளதால், பயணிகள் குறைந்த நேரத்தில் எளிதாக டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். மேலும், அனைத்து வகுப்புகளுக்கான இருக்கை நிலவரமும் ஒரே திரையில் தெளிவாகக் காண்பிக்கப்படும்.

AI தொழில்நுட்பத்தின் மூலம், முன்பதிவு செய்யும் நேரத்திலேயே டிக்கெட் உறுதியாக கிடைக்கும் வாய்ப்பு குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

தட்கல் முன்பதிவு நேரங்களில் கூட ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் வகையில் சர்வர் திறன் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒரு நிமிடத்தில் சுமார் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யும் திறன் புதிய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய மேம்பாடு, குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஏற்பட்ட சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ரயில் பயணிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

related_post