அங்கீகாரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு கடும் எச்சரிக்கை.! குற்றவியல் நடவடிக்கை பாயும்.!
தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அனுமதி மற்றும் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது குற்றவியல் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
அங்கீகாரம் இருப்பதாக போலி விளம்பரங்கள் வெளியிட்டு, மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட இணை இயக்குநர் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உடனடி தடை விதிக்கப்படுவதுடன், உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவப் படிப்புகளில் சேரும் முன், கல்லூரியின் அங்கீகாரத்தை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்த்து உறுதி செய்த பிறகே சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.