"பள்ளிகளின் அவலநிலைக்கு யார் காரணம்?" - அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி
சென்னை: சிவகாசி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளி ஆய்வின்போது, மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், சிலர் பதிலளிக்கத் தடுமாறினர். பின்னர் ஆசிரியர்களிடம் ஆங்கிலக் கற்பித்தலை மேம்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியதோடு, "முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது, கடைசி பெஞ்ச் மாணவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்" எனக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தச் சம்பவத்தை விமர்சித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது ஒரு பள்ளியின் நிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாக அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டதற்கான சாட்சியம். கழிப்பறை, உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாத நிலை ஏன் உருவானது என்பதற்கு முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "நான் அந்தப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல; அது என் தொகுதி. அங்குள்ள மாணவர்களின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு கொண்டு சேர்ப்பது என் கடமை. நான் தமிழ்வழிக் கல்வியில் படித்தவள் என்பதால், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எதிர்கொள்ளும் சவால்களை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான் அவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட முக்கியமானது" என்றும் அவர் கூறியுள்ளார்.
வைரலான வீடியோ குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், "அந்தக் காட்சிகளை பதிவு செய்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் பதிவு செய்தனர். வீடியோவை யார் எடுத்தார்கள் என்பது முக்கியமல்ல. அதில் வெளிப்பட்டுள்ள பள்ளியின் அவலநிலையே உண்மையான விவாதமாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி கவனத்தை திசைதிருப்புவதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். முதல்வர் விஜய் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் அந்த மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து செயல்படுவோம்" என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.