dark_mode
Image
  • Monday, 06 July 2026

டாஸ்மாக் பார்கள் மூடப்படுமா.? 6 வார காலநீட்டிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு

டாஸ்மாக் பார்கள் மூடப்படுமா.? 6 வார காலநீட்டிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களுக்கான டெண்டர் காலம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போதைய உரிமங்களை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து அமைச்சர் விக்னேஷ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

புதிய டெண்டர் வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், பார்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படாமல் இருக்கவும், அரசின் வருவாய் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும் இடைக்கால தீர்வாக காலநீட்டிப்பு வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தற்போதைய உரிமங்களை நீட்டிக்காமல் திடீரென பார்களை மூடினால், அதனுடன் இணைந்த டாஸ்மாக் கடைகளையும் செயல்பட விடமாட்டோம் என பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில், டாஸ்மாக் கடைகள் இயங்கும் கட்டிடங்களின் வாடகை, பராமரிப்பு செலவுகள் மற்றும் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட நிதிச் சுமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஒரு டாஸ்மாக் கடைக்கு சராசரியாக மாதம் ரூ.15 ஆயிரம் வரை வாடகை வழங்கி வரும் நிலையில், நகர்ப்புறங்களில் சில கடைகளின் மாத வாடகை ரூ.50 ஆயிரம் வரை இருப்பதாக கூறப்படுகிறது. அரசு வழங்கும் தொகையைத் தாண்டிய கூடுதல் வாடகையையும், பல இடங்களில் மின்சாரக் கட்டணத்தையும் பார் உரிமையாளர்களே ஏற்று செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு, தற்போதைய உரிமங்களை மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற பார் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அரசு சாதகமான முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

related_post