dark_mode
Image
  • Thursday, 08 October 2026

மண் அகற்ற அனுமதி தாமதம்..! தமிழகத்தில் கட்டுமானத் திட்டங்கள் பாதிப்பு; விரைவான தீர்வு கோரி கிரெடாய் கோரிக்கை

மண் அகற்ற அனுமதி தாமதம்..! தமிழகத்தில் கட்டுமானத் திட்டங்கள் பாதிப்பு; விரைவான தீர்வு கோரி கிரெடாய் கோரிக்கை

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மண் அகற்றுவதற்கான அனுமதிகள் தாமதமாக வழங்கப்படுவதால், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து தோண்டி எடுக்கப்படும் உபரி மண்ணை வெளியே கொண்டு செல்ல அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல கட்டுமானத் திட்டங்கள் திட்டமிட்டபடி முன்னேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கிரெடாய் (CREDAI) சென்னை அமைப்பு, தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானத் தளங்களில் இருந்து மண்ணை எடுத்துச் செல்ல வெளிப்படையான மற்றும் விரைவான அனுமதி நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளின் ஆரம்ப கட்டமான அடித்தளப் பணிகளுக்கு மண் அகற்றுதல் அவசியமானது. அனுமதி தாமதமாவதால் திட்டங்கள் நிறைவடைவதில் தாமதம் ஏற்படுவதுடன், கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பது, வீடுகளை வாங்கியவர்களிடம் ஒப்படைப்பு காலம் நீளுவது, டெவலப்பர்களுக்கு நிதிச் சுமை அதிகரிப்பது போன்ற பாதிப்புகள் உருவாகலாம் என துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும், கட்டுமானத் துறை மந்தமடைந்தால் அதனைச் சார்ந்த சிமெண்ட், இரும்பு, செங்கல் உள்ளிட்ட தொழில்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related_post