கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய், ஆதவ் அர்ஜுனா கருத்துகளுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பிரச்சார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் “கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்” என பேசியது, விசாரணையில் உள்ள சாட்சிகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கள் சிபிஐ விசாரணையை பாதிக்கக்கூடும் என்றும், பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் முக்கிய சாட்சிகள் என்பதால், விசாரணை முடியும் வரை அரசியல் தலைவர்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் விஜய் ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அத்தகைய சந்திப்புகள் விசாரணை நடைமுறைக்கு இடையூறு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அஹ்மதி, நீதிபதிகள் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு அமர்வில் இன்று அவசர முறையீடு செய்தார். “சாட்சிகளை களைக்கும் முயற்சி நடக்கிறது; ஆகவே வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் உடனடி உத்தரவு வழங்க இயலுமா என கேள்வி எழுப்பியதுடன், வழக்கை நாளைய விசாரணைப் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டனர்.
அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான இந்த மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.