dark_mode
Image
  • Friday, 17 July 2026

E20 பெட்ரோல் வழக்கு: வாகன உரிமையாளருக்கு நுகர்வோர் ஆணையம் இழப்பீடு வழங்க உத்தரவு

E20 பெட்ரோல் வழக்கு: வாகன உரிமையாளருக்கு நுகர்வோர் ஆணையம் இழப்பீடு வழங்க உத்தரவு

ராய்ப்பூர்: E20 பெட்ரோல் பயன்படுத்தியதால் வாகனத்தில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், வாகன உரிமையாளருக்கு சாதகமாக ராய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. E20 பெட்ரோல் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய நுகர்வோர் ஆணைய தீர்ப்பாக இது கவனம் பெற்றுள்ளது.

வழக்குதாரர் தனது காரில் E20 பெட்ரோல் பயன்படுத்திய பிறகு இன்ஜின் செயல்திறன் குறைவு, மிஸ்ஃபயரிங், எரிபொருள் சிக்கனம் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டதாகவும், பலமுறை சர்வீஸ் செய்தும் கோளாறுகள் சரியாகவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த வாகன உற்பத்தியாளர் மாருதி சுசூகி மற்றும் சம்பந்தப்பட்ட டீலர், அந்த கார் E20 பெட்ரோலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாகவும், ஏற்பட்ட கோளாறுகளுக்கு E20 பெட்ரோலை காரணமாகக் கூற முடியாது என்றும் வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், ஒரே பிரச்சினைக்காக பலமுறை சர்வீஸ் செய்யப்பட்டும் கோளாறு நீடித்திருப்பதை சுட்டிக்காட்டியது. மேலும், பல பகுதிகளில் E20 பெட்ரோலே கிடைப்பதால், அதை பயன்படுத்துவது நுகர்வோரின் கட்டாய நிலையாக இருப்பதையும் ஆணையம் குறிப்பிட்டது.

இதையடுத்து, வாகனத்தை E20 பயன்பாட்டுக்கு முழுமையாக பொருந்தக்கூடிய புதிய மாடலாக மாற்றி வழங்குமாறு மாருதி சுசூகி மற்றும் டீலருக்கு ஆணையம் உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் அதனை செய்யத் தவறினால், வாகனத்தின் மதிப்பான ரூ.20.50 லட்சத்தை உரிமையாளருக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவிற்காக ரூ.10,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தொகை வழங்கப்படாவிட்டால், அதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், E20 பெட்ரோல் வாகனங்களுக்கு பாதுகாப்பானது என்றே மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ராய்ப்பூர் நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு E20 பெட்ரோல் தொடர்பான விவாதத்தில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு குறிப்பிட்ட வழக்கின் ஆதாரங்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாகும்; E20 பெட்ரோல் அனைத்து வாகனங்களிலும் சேதத்தை ஏற்படுத்தும் என பொதுவாகக் கருத முடியாது.

related_post