dark_mode
Image
  • Friday, 07 August 2026

மேகதாது அணை விவகாரம்: தமிழக–கர்நாடக எல்லையில் பதற்றம்; பேருந்து போக்குவரத்து பாதிப்பு

மேகதாது அணை விவகாரம்: தமிழக–கர்நாடக எல்லையில் பதற்றம்; பேருந்து போக்குவரத்து பாதிப்பு

மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை அமைக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், தமிழக–கர்நாடக எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பெங்களூருவின் குடிநீர் தேவையை முன்னிறுத்தி மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தின் எதிர்ப்பைக் கண்டித்து கர்நாடக சலுவாலி இயக்கம் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் எல்லை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக தமிழக விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு போராட்டம் அறிவித்தன.

இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில காவல்துறையினரும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டனர். ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமமடைந்தனர். அதே நேரத்தில், கர்நாடக மாநில பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இயக்கப்பட்டன. சில தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதால், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

related_post