dark_mode
Image
  • Saturday, 11 July 2026

வியட்நாமில் சுற்றுலா படகு விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு – பலர் கவலைக்கிடம்

வியட்நாமில் சுற்றுலா படகு விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு – பலர் கவலைக்கிடம்

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற விசைப்படகு கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

சனிக்கிழமை ஆன் தோய் துறைமுகம் நோக்கி சென்ற படகில் 32 இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் 4 மாலுமிகள் உட்பட மொத்தம் 36 பேர் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புறப்பட்டு சுமார் 400 மீட்டர் சென்றபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில், பலத்த காற்று காரணமாக படகு திடீரென கவிழ்ந்தது.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் வியட்நாம் கடலோரக் காவல்படை, கடற்படை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன. பலர் உயிருடன் மீட்கப்பட்டாலும், சிலர் மயக்கநிலையிலும் ஆபத்தான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவ இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டு ஹா லாங் பே பகுதியில் நிகழ்ந்த படகு விபத்தில் 35 பேர் உயிரிழந்த நிலையில், அதே ஜூலை மாதத்தில் மீண்டும் நடந்த இந்த விபத்து உலக சுற்றுலா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

related_post