dark_mode
Image
  • Friday, 07 August 2026

வேளாண் பட்ஜெட்: தேர்தல் வாக்குறுதிகள் எங்கே? – வானதி சீனிவாசன் கேள்வி

வேளாண் பட்ஜெட்: தேர்தல் வாக்குறுதிகள் எங்கே? – வானதி சீனிவாசன் கேள்வி

தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் வேளாண் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில், முதல்வரை விமர்சித்து, "கோட் சூட் போட்ட விவசாயி முதல்வர் அவர்களே..." என்று குறிப்பிட்டு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில், தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும், விவசாயி உரிமைத்தொகையாக விதைப்புக் கால நிதியுதவி ரூ.15,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏன் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் பிரபல வசனத்தை மேற்கோள் காட்டிய அவர், "மூன்று வேளை பசி எடுத்தால் சாப்பாட்டை நினைக்கிறோம்; ஆனால் அந்த சாப்பாட்டை உருவாக்கும் விவசாயியை மறந்துவிடுகிறோம்" என்ற வசனம் தற்போதைய வேளாண் பட்ஜெட்டுக்கு பொருந்துவதாக தெரிவித்துள்ளார்.

பல கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த அரசு, அவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் விவசாயிகளின் நலனுக்கான உறுதியான திட்டங்களை இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கத் தவறிவிட்டதாகவும், விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்டது போல் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் வானதி சீனிவாசன் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பாஜக சார்பிலும் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் விவசாயிகள் நலத் திட்டங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பது அரசியல் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

related_post