சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ₹67-ஐ எட்டியது
சென்னை: தமிழ்நாட்டில் சர்க்கரை விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில்லறை சந்தையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.67 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்க்கரை விலை சுமார் 16 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் சர்க்கரைக்கான தேவை அதிகரித்திருப்பதும், சில இடங்களில் சர்க்கரையை அதிகளவில் இருப்பு வைப்பதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
கரும்பு உற்பத்தி பாதிப்பு
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் முக்கிய கரும்பு உற்பத்தி மாநிலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தி இல்லாதது சந்தையில் சர்க்கரை வரத்து குறைவதற்கு காரணமாகியுள்ளது.
மேலும், அதிகப்படியான மழை, கரும்புப் பயிர்களை தாக்கிய ரெட் ராட் மற்றும் டாப் போரர் போன்ற நோய்கள் காரணமாகவும் சில பகுதிகளில் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பண்டிகை கால தேவையும் காரணம்
தொடர்ந்து வரும் பண்டிகைகளால் இனிப்புகள், பேக்கரி பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு அதிகரிக்கும் என்பதால் சர்க்கரைக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனை பயன்படுத்தி சில ஆலை உரிமையாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சர்க்கரையை அதிகளவில் இருப்பு வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எத்தனால் உற்பத்தி குறித்து மத்திய அரசு விளக்கம்
கரும்புச்சாறு எத்தனால் உற்பத்திக்கு அதிகளவில் திருப்பி விடப்படுவதாலேயே சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
தற்போது எத்தனால் உற்பத்திக்கு கரும்பைத் தவிர சோளம் உள்ளிட்ட தானியங்களும் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி
சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாட்டை போக்கவும் மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 31ஆம் தேதிக்குள் 10 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த நுகர்வோர் அதிகளவில் சர்க்கரையை பதுக்கி வைக்காத வகையில் கையிருப்பு வரம்புகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சர்க்கரை ஆலைகள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் உள்ள சர்க்கரை இருப்பை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீ, காபி முதல் இனிப்பு வரை விலை உயருமா.?
சர்க்கரை விலை உயர்வு சில்லறை நுகர்வோர்களை மட்டுமின்றி, சர்க்கரையை அதிகளவில் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களையும் பாதிக்கக்கூடும்.
தேநீர் மற்றும் காபி கடைகளில் விலை உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதேபோல் பேக்கரி பொருட்கள், இனிப்புகள் மற்றும் சர்க்கரை பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் விலையிலும் தாக்கம் ஏற்படலாம்.
எனினும், மத்திய அரசின் இறக்குமதி நடவடிக்கைகள் மற்றும் பதுக்கலை தடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக சந்தையில் சர்க்கரை வரத்து அதிகரித்து, வரும் நாட்களில் சில்லறை விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பீகாரிலும் ரூ.65-ஐ கடந்த சர்க்கரை
பீகாரிலும் சர்க்கரை விலை கிலோ ரூ.65-ஐ கடந்துள்ள நிலையில், விலை உயர்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அமைச்சர் ஷ்ரவண் குமார், மக்கள் சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை குறைத்து வருவதால் சர்க்கரை விலை உயர்வு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்க்கரை விலை உயர்வு தொடருமா அல்லது மத்திய அரசின் நடவடிக்கைகளால் விரைவில் கட்டுக்குள் வருமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.