dark_mode
Image
  • Monday, 10 August 2026

“தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ்” என மிரட்டல்... ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.2 கோடிக்கு மேல் சைபர் மோசடி!

“தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ்” என மிரட்டல்... ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.2 கோடிக்கு மேல் சைபர் மோசடி!

சென்னை: தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் எனக் கூறி ஓய்வு பெற்ற ஆசிரியரை மிரட்டி, அவரிடமும் அவரது மனைவியிடமும் இருந்து ரூ.2 கோடிக்கும் அதிகமான பணத்தை சைபர் மோசடி கும்பல் பறித்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு சமீபத்தில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆசிரியரின் வங்கிக் கணக்குகள் தீவிரவாதிகளின் சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

மேலும், “விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்து விடுவோம். உங்கள் நிரபராதித்தனத்தை நிரூபிக்க, நாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்ப வேண்டும். விசாரணை முடிந்ததும் பணம் திருப்பி வழங்கப்படும்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.

நம்ப வைத்த வாக்கி-டாக்கி சத்தம்

தொலைபேசி உரையாடலின்போது பின்னணியில் போலீஸார் பயன்படுத்துவது போன்ற வாக்கி-டாக்கி சத்தம் கேட்டதால், அந்த நபர் உண்மையிலேயே போலீஸ் அதிகாரி என ஆசிரியர் நம்பியுள்ளார்.

இதையடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தை அந்த நபர் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

இதன் பின்னர், ஆசிரியரின் மனைவியின் வங்கிக் கணக்கிலும் சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றங்கள் இருப்பதாக கூறி, அவரது கணக்கில் இருந்த ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தையும் தாங்கள் கூறும் கணக்கிற்கு மாற்றுமாறு மோசடி கும்பல் வலியுறுத்தியுள்ளது.

போனில் தொடர்ந்து மிரட்டப்பட்டதால், இந்த விவகாரம் குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் கணவன், மனைவி இருவரும் பணத்தை மாற்றியுள்ளனர்.

பணத்தை இழந்த பிறகே உணர்ந்த அதிர்ச்சி

மொத்தமாக ரூ.2 கோடிக்கும் அதிகமான பணத்தை இழந்த பின்னரே தாங்கள் சைபர் மோசடிக்கு ஆளாகியிருப்பதை ஆசிரியர் மற்றும் அவரது மனைவி உணர்ந்துள்ளனர்.

இதையடுத்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.

போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து பணத்தை ‘சரிபார்ப்பதாக’ கூறி வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொல்வது சைபர் மோசடியின் முக்கியமான புதிய யுக்திகளில் ஒன்றாக இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

related_post