உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
சென்னை: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (NFSA) 2013-ல் மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தம், தமிழகத்தில் உள்ள சுமார் 70 லட்சம் ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும் எனக் குறிப்பிட்டு, அந்த திருத்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், தற்போது அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுவதாகவும், புதிய திருத்தத்தின்படி ஒருவருக்கு 7 கிலோ என்ற அடிப்படையில், அதிகபட்சம் 35 கிலோ வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 மட்டுமே என்பதால், இந்த மாற்றம் மாநிலத்தின் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு கிடைக்கும் உணவு தானிய ஒதுக்கீட்டை கணிசமாகக் குறைக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் 18.64 லட்சம் AAY குடும்ப அட்டைகள் மூலம் 69.26 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருவதாகவும், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட மிகவும் நலிவடைந்த பிரிவினரே இந்தத் திட்டத்தின் முக்கிய பயனாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது AAY பயனாளிகளுக்காக மாதந்தோறும் 65,261 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய திருத்தம் அமலுக்கு வந்தால் அது சுமார் 42,040 மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிடும் என்றும், இதனால் சுமார் 70 லட்சம் ஏழை மக்களின் வாழ்வாதாரமும், ஊட்டச்சத்து பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
தமிழகம் வலுவான பொது விநியோகத் திட்டத்தை (PDS) தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், அரிசியை முதன்மை உணவாகக் கொண்ட மாநிலத்தில் இந்த ஒதுக்கீடு குறைந்தால் ஏழை குடும்பங்கள் கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கத்தைப் பாதுகாக்கும் வகையில், தற்போதுள்ள நடைமுறையை மாற்றாமல், AAY திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கும் முறையைத் தொடர வேண்டும் என மத்திய அரசை முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.