புளியந்தோப்பு பள்ளி திறப்பு விழாவில் மேயர் பிரியா - எம்எல்ஏ பல்லவி இடையே பரபரப்பு; மெழுகுவர்த்தி விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியது
சென்னையின் புளியந்தோப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளி திறப்பு விழாவில் சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ பல்லவி ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின் போது ஏற்பட்ட சிறிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், புளியந்தோப்பு அரசு பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளி வளாகத்தில் ரிப்பன் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது மேயர் பிரியா ராஜன் முன்னிலை வகித்த நிலையில், அருகில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியை முன்வரிசையில் நிற்குமாறு அழைத்ததாகவும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பல்லவி பின்னால் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மெழுகுவர்த்தியை பெறுவதற்காக எம்எல்ஏ பல்லவி கையை நீட்டிய நிலையில், மேயர் பிரியா அவரிடம் வழங்காமல் அருகில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்ததாகக் கூறப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தால் அதிருப்தியடைந்த பல்லவி நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ பல்லவி, "எங்கள் தொகுதியில் பல ஆண்டுகளாக மக்களின் அடிப்படை தேவைகள் கூட முறையாக கவனிக்கப்படவில்லை. கடந்த ஆட்சியின்போது மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டனர். தற்போது நாங்கள் நேரடியாக மக்களுக்காக களத்தில் பணியாற்றி வருகிறோம். ஆனால் சிலர் இன்னும் அதிகார ஆணவத்திலும் பழைய மனநிலையிலும் செயல்பட்டு வருகின்றனர். இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாது. மக்களே அனைத்தையும் கவனித்து வருகிறார்கள். எங்கள் தலைமை பொறுமையை வலியுறுத்துகிறது. அதே வழியில் நாங்களும் பொறுமையாக செயல்படுவோம்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மேயர் பிரியா ராஜன், "நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பல்லவி அவர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு, ரிப்பன் வெட்டும் நிகழ்விலும் பங்கேற்றார். குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில் அரசின் நடைமுறை விதிமுறைகள் மற்றும் புரோட்டோகால் அடிப்படையில் முதலில் ஐஏஎஸ் அதிகாரி, பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்க வேண்டும். அதன்படியே செயல்பட்டோம். இதை தவறாக புரிந்துகொண்டு சிலர் விமர்சித்து வருகின்றனர்" என்று கூறினார்.
ஆனால் சமூக வலைதளங்களில் பலரும் மேயரின் விளக்கத்தை ஏற்க மறுத்து கருத்து தெரிவித்து வருகின்றனர். "புரோட்டோகால் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒருவர் கையை நீட்டி பொருளை வாங்க முயற்சிக்கும்போது அவரிடம் வழங்காமல் அடுத்தவரிடம் கொடுப்பது மரியாதைக்குறைவாக பார்க்கப்படுகிறது" என பலர் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டுமெனவும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
இதற்கிடையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பொதுவெளியில் அரிதாகவே தோன்றிய மேயர் பிரியா ராஜன் சமீப காலத்தில்தான் மீண்டும் அலுவலக மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சியினரும் சில அரசியல் செயற்பாட்டாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். புளியந்தோப்பு பள்ளி விழாவில் நடந்த இந்த சம்பவம் தற்போது அரசியல் விவாதமாக மாறி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.