எம்எல்ஏ கைது: சபாநாயகர் அனுமதி அவசியமா? – சட்டமன்ற அதிகாரிகள் விளக்கம்
சென்னை: விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதவியில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதி அவசியமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சட்டமன்ற அதிகாரிகள் அளித்த விளக்கத்தின் படி, ஒரு எம்எல்ஏவை குற்றவியல் வழக்கில் கைது செய்வதற்கு போலீசார் அல்லது பிற சட்ட அமலாக்க அமைப்புகள் சபாநாயகர் அல்லது சட்டமன்றச் செயலகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டிய சட்டப்பூர்வ கட்டாயம் இல்லை.
ஆனால், கைது செய்யப்பட்ட உடனேயே அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சபாநாயகருக்கும் சட்டமன்றச் செயலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. அதன்படி, மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவரம் சட்டமன்றச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், கைது செய்யப்படும் முன் பேசிய மார்க்கண்டேயன், தாம் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் சபாநாயகரின் அனுமதி இல்லாமல் கைது செய்ய முடியாது என்று வலியுறுத்தியிருந்தார்.
மேலும், சட்டமன்ற அதிகாரிகள் விளக்கமளிக்கையில், இந்த விதி சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெறும் கைது நடவடிக்கைகளுக்கே பொருந்தும் என்றும், சட்டமன்ற வளாகத்திற்குள் ஒரு எம்எல்ஏவை கைது செய்யவோ அல்லது சம்மன் வழங்கவோ சபாநாயகரின் முன் அனுமதி கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம், எம்எல்ஏக்கள் கைது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.