2050-க்குள் புற்றுநோய் பாதிப்பு இருமடங்காகும் அபாயம்.? – உலக நாடுகளுக்கு WHO அவசர எச்சரிக்கை
உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகால நோயறிதலை தீவிரப்படுத்தாவிட்டால், 2050-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் புதிய புற்றுநோய் பாதிப்புகள் சுமார் 3.5 கோடியாக உயரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை (IARC) இணைந்து வெளியிட்ட 'உலகளாவிய புற்றுநோய் நிலை அறிக்கை 2026'-இல், தற்போது ஆண்டுதோறும் சுமார் 2.06 கோடி புதிய புற்றுநோய் பாதிப்புகளும், 1 கோடிக்கும் அருகிலான உயிரிழப்புகளும் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் நுரையீரல் புற்றுநோய் முதலிடத்தில் தொடர்கிறது. ஆண்களிடம் நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களும், பெண்களிடம் மார்பக, நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களும் அதிகளவில் காணப்படுகின்றன.
புகையிலை, மது, உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் HPV, ஹெபடைடிஸ் B, C போன்ற தொற்றுகள் உள்ளிட்ட தடுக்கக்கூடிய காரணிகளால் சுமார் 40% புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும் WHO தெரிவித்துள்ளது.
மேலும், உயர் வருமான நாடுகளுக்கும் குறைந்த வருமான நாடுகளுக்கும் இடையே சிகிச்சை மற்றும் உயிர்வாழ்வு விகிதத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும், பல நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை இன்னும் பொதுச் சுகாதாரக் காப்பீட்டின் கீழ் முழுமையாக இடம்பெறவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
"வருமுன் காப்போம்" என்ற அணுகுமுறையுடன், விழிப்புணர்வு, தடுப்பூசி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரம்பகால மருத்துவப் பரிசோதனைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களும் உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தியுள்ளன.