மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்க தமிழ்நாடு மாடல்: உத்தரப் பிரதேசம் அதிகாரிகள் ஆய்வு பயணம்.!
மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், அதைக் குறைக்கும் முயற்சியாக அந்த மாநிலத்தின் திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாடு வந்துள்ளனர். குறைந்த மகப்பேறு இறப்பு விகிதத்திற்காக முன்னுதாரணமாக விளங்கும் தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பை ஆய்வு செய்வதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.
இந்தப் பயணத்தின் போது, தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர்கள் விரிவான கலந்துரையாடல் நடத்தினர். குறிப்பாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.18,000 நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் தாய்மார்களின் உடல்நலத்தை மேம்படுத்தி, இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக விளக்கப்பட்டது.
மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) கணக்கீட்டின் அடிப்படையில், 1 லட்சம் பிரசவங்களில் தமிழ்நாட்டில் 35 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகின்றன. ஆனால் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 140 ஆக உள்ளது. இந்த வித்தியாசத்தை குறைக்க தமிழ்நாட்டின் மருத்துவ முறைகளை தங்களிடம் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும், 24 மணி நேரம் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அவசரகால மகப்பேறு சிகிச்சை மையங்கள் மற்றும் ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் உள்ள கர்ப்பிணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கும் நடைமுறைகள் தமிழ்நாட்டின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்த ஆய்வு பயணம், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடி சுகாதார மாடலாக திகழ்வதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.