dark_mode
Image
  • Saturday, 19 September 2026

“என்னை மிரட்ட முடியாது” – நேருவுக்கு துரை வைகோ பதிலடி

“என்னை மிரட்ட முடியாது” – நேருவுக்கு துரை வைகோ பதிலடி

திருச்சி: தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களைத் தொடர்ந்து திமுக – மதிமுக இடையேயான கருத்து மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் விமர்சனங்களுக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, திமுக கூட்டணியில் இருந்தபோது தங்கள் கட்சியை திட்டமிட்டு ஒதுக்கியதாக குற்றம்சாட்டினார். கூட்டணி தொடர்பான ஒரு கூட்டத்தில் தங்களின் சுயமரியாதை சோதிக்கப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், “அரசியலுக்கு வந்ததே விபத்து. கட்சிக்காரர்களுக்காகத்தான் பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வருகிறேன்” என துரை வைகோ தெரிவித்தார்.

நேருவின் பழைய பேச்சுகளை சுட்டிக்காட்டிய துரை வைகோ

தன்னை விமர்சித்த கே.என். நேருவின் கருத்துகளுக்கு பதிலளித்த துரை வைகோ, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து நேரு கடந்த காலங்களில் விமர்சித்ததாக கூறினார்.

“கலைஞர் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது என தற்போதைய திமுக தலைமையை சிறுமைப்படுத்திப் பேசியவர் நேரு. ‘இந்த பையனை எல்லாம் வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது’ என உதயநிதி குறித்து பேசியவரும் அவர்தான்” என துரை வைகோ தெரிவித்தார்.

“என்னை யாரும் மிரட்ட முடியாது”

தன்னை குறிவைத்து தனிப்பட்ட விமர்சனங்களும் அவதூறுகளும் முன்வைக்கப்படுவதாக துரை வைகோ குற்றம்சாட்டினார். இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு தான் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், “என்னை தொந்தரவு செய்தால் எல்லாவற்றையும் பேசுவேன். இன்னும் வேகமாக எதிர்மறை அரசியல் செய்வேன்” என்றும் துரை வைகோ தெரிவித்தார்.

திமுக – மதிமுக இடையேயான இந்த கருத்து மோதல், தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

related_post