dark_mode
Image
  • Wednesday, 09 September 2026

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்: தமிழகத்திற்கு ரூ.9,576 கோடி கூடுதல் செலவு – CAG

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்: தமிழகத்திற்கு ரூ.9,576 கோடி கூடுதல் செலவு – CAG

சென்னை: தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால் தமிழகத்திற்கு ரூ.9,576 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள CAG அறிக்கையில், மின் உற்பத்தி, அனல் மின் நிலையங்களின் பராமரிப்பு, நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்துறையில் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

2023 மார்ச் நிலவரப்படி தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 35,036 மெகாவாட்டாக இருந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சொந்த உற்பத்தித் திறன் 7,175 மெகாவாட் மட்டுமே இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதனால் மின் தேவையை பூர்த்தி செய்ய வெளிப்புற நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், அனல் மின் நிலையங்களில் போதிய பராமரிப்பு இல்லாததால் ஏற்பட்ட உற்பத்தித் தடைகள் காரணமாக தனியாரிடம் அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் CAG தெரிவித்துள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.9,576 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

மேலும், வடசென்னை விரிவாக்க அனல் மின் நிலையத்தில் செயல்திறன் குறைவு மற்றும் சாம்பல் கையாளும் அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரூ.131.58 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி கொள்முதலிலும் கூடுதல் செலவு

நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க அதிக விலைக்கு நிலக்கரி வாங்கியதால் ரூ.3,941 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மேலும், நிலக்கரிக்கான விலை நிர்ணய முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் குறைந்த தர நிலக்கரியை பயன்படுத்தியதால் ஏற்பட்ட கூடுதல் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களாலும் பெருமளவு செலவு ஏற்பட்டதாக CAG சுட்டிக்காட்டியுள்ளது.

நிலக்கரியின் விலை முறையை மாற்றாமல் இருந்ததால் ரூ.1,244.10 கோடியும், குறைந்த தர நிலக்கரியை பயன்படுத்தியதால் தவிர்க்கக்கூடிய வகையில் ரூ.1,563 கோடியும் கூடுதல் செலவாகியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

உப்பூர் திட்டத்தில் ரூ.2,020 கோடி மதிப்புள்ள பொருட்கள்

ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் திட்டத்துக்காக வாங்கப்பட்ட ரூ.2,020 கோடி மதிப்பிலான பொருட்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் CAG அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், எரிவாயு மின் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எரிவாயு பயன்படுத்தப்பட்டதால் ரூ.296 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவுகளை குறைக்க நடவடிக்கை தேவை

CAG அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளை கருத்தில் கொண்டு, அனல் மின் நிலையங்களில் தடுப்பு பராமரிப்பை முறையாக மேற்கொண்டு சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மின்சார பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் தனியார் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் நிலையை குறைப்பதுடன், நிலக்கரியின் விலை, தரம் மற்றும் விநியோகத்தையும் முறையாக கண்காணிக்க வேண்டும்.

மேலும், உப்பூர் திட்டத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள ரூ.2,020 கோடி மதிப்பிலான பொருட்களை என்ன செய்வது என்பது குறித்தும் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என CAG அறிக்கை வலியுறுத்தும் வகையில் பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

related_post