இடைத்தேர்தலில் நாதக போட்டியிடுமா? நிர்வாகிகள் தயக்கம்
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது தொடர்பாக கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு தொகுதிகளிலும் நாதக வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என்பதில் கட்சியின் தலைமை ஒருபுறம் உறுதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், மீண்டும் தோல்வியை சந்தித்தால் அது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தும் என மூத்த நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஏற்கனவே தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. தவெகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், நாதக தரப்பில் இதுவரை போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் நாதக எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகளைப் பெறவில்லை. இதனால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பதிலாக தேர்தலை புறக்கணிப்பது அல்லது அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்சிக்குள் சிலர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
மேலும், இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு அதிகளவில் பணம், மனிதவளம் மற்றும் களப்பணி தேவைப்படும் என்பதால், தற்போதைய சூழலில் தேர்தல் பணிச்சுமையை ஏற்றுக்கொள்வது கட்சிக்கு சிரமமாக இருக்கும் என்றும் சில நிர்வாகிகள் கருதுவதாக கூறப்படுகிறது.
அதேசமயம், கட்சி தலைமை தரப்பில் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நாதக களமிறங்குமா அல்லது வேறு முடிவை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.