வேலூரில் 36 சவரன் நகை திருட்டு: கணவன்–மனைவி கைது; சொகுசு வாழ்க்கைக்காக திருடியதாக வாக்குமூலம்
வேலூர்: காட்பாடி அருகே ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியையின் வீட்டில் 36 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கணவன்–மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 26 சவரன் நகைகள் மற்றும் திருட்டுப் பணத்தில் வாங்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்த ராஜ்குமார்–மரியா தம்பதி, கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சர்ச் பாதிரியாரை சந்திக்க ஆற்காடு சென்றுள்ளனர். இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பீரோவில் இருந்த ஆரம், நெக்லஸ், செயின், வளையல், கம்மல் உள்ளிட்ட 36 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான இளைஞரும் பெண்ணும் பஸ் நிலையத்துக்குச் சென்று சித்தூர் செல்லும் பேருந்தில் ஏறியது தெரியவந்தது.
இதையடுத்து சித்தூர் போலீசாரின் உதவியுடன் அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணையில், அந்த இருவரும் சித்தூரில் வாடகை வீட்டில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டை சுற்றிவளைத்த போலீசார் இருவரையும் கைது செய்து காட்பாடிக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில், அவர்கள் விருதுநகரைச் சேர்ந்த முத்துவேல் கார்த்திக் (32), பிரபாவதி (30) என்பதும், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் வெளியூர்களுக்குச் சென்று வாடகை வீடுகளில் தங்கி, கணவன்–மனைவியாக இணைந்து வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். திருடிய நகைகள் மற்றும் பொருட்களை விற்று கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காட்பாடி மட்டுமின்றி சித்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த ஜோடி கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 26 சவரன் தங்க நகைகள் மற்றும் திருட்டுப் பணத்தில் வாங்கிய கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.