கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ப.கோகுல்தாஸ் தலைமையிலான விசாரணை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், இயற்கை மதுபானமான கள்ளை இறக்கி விற்பனை செய்ய உரிமம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையை வரவேற்றுள்ள நயினார் நாகேந்திரன், கள் விற்பனைக்கு உரிய விதிமுறைகளுடன் அனுமதி வழங்குவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், கிராமப்புற பொருளாதாரத்துக்கும் உதவும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ரசாயனக் கலப்புள்ள கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், இயற்கையான கள்ளுக்கு சட்டப்பூர்வமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை ஆணையத்தின் பரிந்துரையை வெறும் அறிக்கையாக வைத்திருக்காமல், காலம் தாழ்த்தாமல் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கள் விற்பனைக்கு அனுமதி வழங்குவது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.