dark_mode
Image
  • Thursday, 03 September 2026

பள்ளிக்கு சென்ற பழங்குடியின மாணவிகள் மீது கொடூரம்? அரசு பேருந்தில் அதிர்ச்சி சம்பவம் !

பள்ளிக்கு சென்ற பழங்குடியின மாணவிகள் மீது கொடூரம்? அரசு பேருந்தில் அதிர்ச்சி சம்பவம் !

புதுக்கோட்டை: புதுக்கோட்டை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த பழங்குடியின மாணவிகளுக்கு நேர்ந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரங்கம்மாள் சத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள் வழக்கம்போல் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது வந்த அரசு பேருந்தில் மாணவிகள் பள்ளிக்குச் செல்ல ஏறியுள்ளனர்.

பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில், கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி மாணவிகளை கீழே இறங்குமாறு நடத்துநர் கூறியதாக தெரிகிறது. பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் மாணவிகள் இறங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், பேருந்தின் கதவு திறக்கப்பட்டு ஒரு மாணவி பலவந்தமாக கீழே தள்ளப்பட்டதாக மாணவிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்ததைத் தொடர்ந்து, மற்ற மாணவிகளும் அடுத்தடுத்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பல மாணவிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த மாணவிகள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

சம்பவம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் அர்ஜுனன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், தற்காலிக நடத்துநர் மணிகண்டன் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி. கண்டனம்

சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக எம்.பி. கனிமொழியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

கல்வி கற்கச் செல்லும் பழங்குடியின மாணவிகளுக்கு அரசு பேருந்தில் இத்தகைய கொடுமை நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாணவிகள் பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய சூழலில், அரசு பேருந்தில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

related_post