dark_mode
Image
  • Tuesday, 08 September 2026

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூதாட்டியிடம் 3 சவரன் நகை திருட்டு – 2 பெண்கள் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூதாட்டியிடம் 3 சவரன் நகை திருட்டு – 2 பெண்கள் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 சவரன் தங்க நகையை திருடியதாக இரு பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த பாப்பாத்தி (61), கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு செல்வதற்காக இன்டர்சிட்டி ரயிலில் ஏறியுள்ளார்.

அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் குறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீஸார், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ரயிலில் ஏறும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு பெண்கள் பாப்பாத்தியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திருடியது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, கர்நாடகாவைச் சேர்ந்த பாரதி (70), பூஜா (28) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதேபோன்று வேறு ரயில் நிலையங்கள் அல்லது ரயில்களில் பயணிகளிடம் நகை திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் நகை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரயில் பயணிகள் தங்களது உடைமைகள் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு ரயில்வே போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

related_post