பெருந்துறை தேர்தல் வழக்கு தள்ளுபடி: இடைத்தேர்தலுக்கான சட்டத் தடை நீங்கியது.?
ஈரோடு: பெருந்துறை சட்டமன்றத் தொகுதி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். ஜெயகுமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி இந்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ். ஜெயகுமார் வெற்றி பெற்றார். பின்னர் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இதையடுத்து, அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் கோரி தி.மு.க. வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இதற்கிடையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாகின. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவானது.
ஆனால், அந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்ததால், இடைத்தேர்தல் நடத்துவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, தேர்தல் மனுதாரர்கள் தங்களையே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரியிருந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்தினால் ஒரே தொகுதிக்கு இரண்டு பேர் உரிமை கோரும் நிலை உருவாகலாம் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக, வழக்குகள் முடிவடையும் வரை ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், பெருந்துறை தொகுதி தொடர்பான வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அந்த தொகுதிக்கான தேர்தல் வழக்கில் ஒரு முக்கிய சட்டத் தெளிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் நீங்கியுள்ளதா? தேர்தல் ஆணையம் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
மீதமுள்ள நான்கு தொகுதிகளின் தேர்தல் வழக்குகளிலும் தீர்ப்புகள் வெளியாகும் நிலையில், தமிழகத்தின் இடைத்தேர்தல் அரசியல் களம் அடுத்த கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.