விஜய் பயணம் தொடர்பான விபத்து: 19 நாட்கள் போராட்டத்திற்கு பின் மாணவர் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சித் தலைவர் விஜய் சென்னை இருந்து தனியார் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் சாலை வழியாக தஞ்சாவூர் நோக்கிச் சென்றார்.
அப்போது, அவரின் வாகனத்தை பின்தொடர்ந்து பல இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்றனர். திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி அருகே, காவல்துறையினர் நிறுத்தியிருந்த வாகனத்தை மோதியதில், விஜயை பின்தொடர்ந்த இளைஞர்களின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், தனியார் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் அருண் கடுமையாக காயமடைந்தனர். அருணுக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டது. விக்னேஷ் தலையில் தீவிர காயம் அடைந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், 19 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.