dark_mode
Image
  • Tuesday, 28 July 2026

"மேகேதாட்டு விவகாரம்: தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர் விஜய் – உதயநிதி ஸ்டாலின்"

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை மாநில அரசு உறுதியாக பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் செயல்பாடு கடும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவுக்கு தேவையில்லை என்று ஒன்றிய அரசின் இணை அமைச்சர் அளித்த பதில், காவிரி நீர் உரிமை தொடர்பாக தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இது மாநிலத்தின் உரிமைகள் மீதான மிகப்பெரிய சவாலாகும்.

டெல்லியில் ஆளும் அதிகார மையத்துடன் மோதலைத் தவிர்க்கவும், ஆட்சியை பாதுகாக்கும் அரசியல் கணக்கில் காங்கிரஸுக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருக்கவும், தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் விஜய் அடகு வைத்துள்ளார். மாநில நலனைக் காட்டிலும் அரசியல் வசதிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "இந்த விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒன்றிய அரசிடம் மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கு எதிராக வலியுறுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையிலேயே நான் வலியுறுத்தினேன். ஆனால், அந்தக் கோரிக்கையை மாநில அரசு கவனத்தில் கொள்ளவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், "கர்நாடகாவில் திரைப்பட வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், இந்த 'சோபா மாடல் முதலமைச்சர்' எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும், காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளையும் புறக்கணித்துள்ளார். அரசின் இந்த மௌனம் தமிழ்நாட்டின் நீர் உரிமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இறுதியாக, "மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி முன்னேறினால், காவிரி நீரை நம்பி வாழும் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, காலதாமதமின்றி ஒன்றிய அரசுடன் வலுவான பேச்சுவார்த்தை நடத்தி, மேகேதாட்டு அணைத் திட்டத்தை தடுக்க முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

related_post